Skip to content

Admissions: +91 94862 15365 · +91 94434 53943 · ajfacollege@gmail.com

Al Jamiathul Firdousiyya Arabic Collegeالجامعة الفردوسية - كلية شرعية إسلاميةஅல் ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக் கல்லூரி
Al Jamiathul Firdousiyya Arabic College campus

கல்லூரி அறிமுகம்

அல் ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக்கல்லூரி, நாகர்கோவில்

بسم الله الرحمن الرحيم

அல் ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக்கல்லூரி

நாகர்கோவில்

ஓர் அறிமுகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை ரோட்டில் அமைந்துள்ள அல் ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக்கல்லூரி “ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்” அமைப்பின் சார்பாக 1987 ஆம் ஆண்டு நாகர்கோவில் கல்லூரிச்சாலையில் உள்ள கலாச்சாரப்பள்ளிவாசலில் துவங்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகள் அந்தப்பள்ளிவாசலில் கல்லூரி சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த கல்லூரிக்கென சொந்த கட்டிடம் கோட்டாறு பறக்கை சாலையில் எழுப்பிய பின்னர் 1993 முதல் புதிய கட்டிடத்தில் செயல்படத் துவங்கி, அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் இக்கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நோக்கமும் குறிக்கோளும்

முஸ்லிம் சமுதாயத்திலிருந்து இக்கல்லூரியை நாடிவரும் அனைத்து இளைஞர்களுக்கும் இஸ்லாமிய அறிவொளி புகட்டி, அவர்களை நன்னெறிப்படுத்தி, ஓரிறை நம்பிக்கையும் ஒழுக்கக்கட்டுப்பாடும் உள்ளவர்களாக அவர்களைத் தயார்படுத்தவே இக்கல்லூரி நிறுவப்பட்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

இந்தியாவின் தென்மாவட்டங்களில் உள்ள அரபிக்கல்லூரிகள் மத்தியில் இது தனி இடத்தைப்பெற்று முன்னேறிய ஒரு கல்வி நிலையமாக உருவெடுத்துள்ளது.

திருக்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையிலிருந்து வழுவாத கல்வித்திட்டத்தை இக்கல்லூரி வழங்கி வருகிறது. புதிய பாடத்திட்டம், நவீன பயிற்றுவிப்பு முறை, மாறுபட்ட தேர்வுமுறை, கணினிப்பயிற்சி என புதுமையாக செயல்பட்டு வருகிறது.

பாடத்திட்டம்

ஐந்தாண்டு பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இஸ்லாமிய இளநிலைப் பட்டதாரியாக (Bachelor of Islamic Studies — B.I.S.) சான்றிதழ் பெறத் தகுதியுள்ளவராகிறார்.

மாணவர் தகுதி

ஐந்தாண்டு பாடத்திட்டத்தின்கீழ் சேர்ந்து பயில விருப்பமுள்ளவர்கள் பள்ளிப்படிப்பில் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேறியிருப்பதுடன் குர்ஆனை சரளமாக ஓதவும் தெரிந்திருக்க வேண்டும். ஓதத் தெரியாதவர்கள் ஒரு வருட அடிப்படைப் பயிற்சி வகுப்பில் இணைந்து தேர்ச்சி பெற்ற பிறகு ஆலிம் பிரிவில் சேர்ந்து கொள்ளலாம்.

ஃபிர்தவ்சி பட்டதாரிகள்

இக்கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்றுள்ளனர். முறையான ஐந்தாண்டு பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்து தேறி சான்றிதழ் பெற்றவர்கள் ஃபிர்தவ்சிகள் என அறியப்படுகிறார்கள். இவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும், அயல் நாடுகளிலும் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்கள் இஸ்லாமிய அறிவை குர்ஆன் நபிவழியின் அடிப்படையில் அறிந்து கொள்கின்றனர்.

திருக்குர்ஆன் மனனப்பிரிவு

கல்லூரியில் திருக்குர்ஆன் மனப்பாடப்பிரிவு (ஹிஃப்ஸூல் குர்ஆன்) செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவர்கள் ஹாபிழ்களாக மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்படுகிறார்கள்.

அரபி மொழிப்புலமை

தமிழ், ஆங்கில மொழிகளுக்கு இணையாக முக்கியத்துவம் தரப்பட்டு அரபிமொழி முக்கிய மொழியாக ஆக்கப்பட்டுள்ளது. சிறந்த முறையில் அரபிமொழியைப் பேசவும், எழுதவும், மொழிபெயர்க்கவும் சிறப்புப்பயிற்சி வழங்கப்படுகிறது.

இரண்டு வகைப் படிப்புகள்

நமது கல்லூரியில் இஸ்லாமியப் படிப்புடன் கல்லூரி மற்றும் பள்ளிக்கல்விப் படிப்பும் சேர்த்தே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் விரும்பும் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புக்கும் நமது கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது. பல்கலைத் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களும் உண்டு.

கணினிப்பயிற்சி

பெருகிவரும் கணினி தொழில்நுட்பத்திற்கேற்ப மாணவர்களுக்கு விரிவான, முழுமையான கணினிப்பயிற்சி கட்டாயப் பாடமாக தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு வகுப்பு

அவ்வப்போது திறமையும் அனுபவமும் கொண்ட அறிஞர்களைக் கொண்டு பல்வேறு முக்கிய பாடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மாணவர் விடுதி

மூன்று வேளை தரமான உணவு, காலை மாலை தேநீருடன் உறைவிடமும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுகாதாரமான சுற்றுச்சூழல், சுத்தமான குடிநீர், 24 மணிநேர மருத்துவசேவை, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகள் போன்றவை மாணவர்களுக்கு சிறப்பான முறையில் செய்து தரப்பட்டுள்ளன. அத்துடன் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே தொழுகைப்பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது.

பேச்சுப் பயிற்சி

மாணவர்களிடையே பேச்சுத்திறனை மேம்படுத்த வாரந்தோறும் சொற்பயிற்சி மன்றக்கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.

ஸ்மார்ட் கிளாஸ்

மாணவர்களுக்கு பாடங்கள் எளிமையான முறையில் போதிப்பதற்கு வசதியாக ஸ்மார்ட் கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது.

நிர்வாகம்

இக்கல்லூரி ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) மாநிலத் தலைமையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கென ஒரு நிர்வாகக்குழு செயல்பட்டு வருகிறது.

செலவுகள்

கல்லூரிக்கு மாதம்தோறும் ஐந்து லட்ச ரூபாய் வரை செலவிடப்படுகிறது. நல்லுள்ளம் படைத்தவர்களின் உதவிகளாலும் நன்கொடைகளாலுமே இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

எதிர்கால திட்டமும் தேவையும்

கல்லூரிக்கு விசாலமான வகுப்பறைகளும் ஒரு Conference Hall — ஆலோசனைக் கூடமும் தேவைப்படுகின்றன. இதற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.